Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
கதம்பம் 1
கதம்பம் 2
கதம்பம் 3
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
       தெற்கு

பொற்கொடிபோல் சேலையிலே
 பூச்சூடிப் பொலிகின்றாள்!
நெற்கதிர்போல் தலைகுனிந்து
  நிலம்பார்க்க நடக்கின்றாள்!
நற்குணங்கள் நாலும்பெற்றாள்!
  நளினமெனும் விழிபெற்றாள்!
தெற்கு அவளின் பிறந்தகமாம்
  செந்தமிழே அவள்மொழியாம்!

       கா...கா...

காவினில் பூக்கள் மலர்(வது)
 இயற்கையின் கட்டளைக்கா?
ஆவலில்தேன் உண்டுகளி
  ஆட்டமிடும் வண்டுகட்கா?
கோவிலில் தெய்வத்தின்முன்
  கொட்டிப் பூசிப்பதற்கா?
பூவையரின் தன்மையினைப்
  புரியவைக்கும் உவமைக்கா?

       கோடு

கற்றறியும் தன்மையிலும்
  காதல்செய்யும் தன்மையிலும்
மற்றும்உயர் பண்பினிலும்
  வாழ்கின்ற தன்மையிலும்
நற்றமிழர் நமக்குள்ளே
  சாதிக்கோர் தன்மையுண்டோ?
சுற்றியொரு சாதிவட்டக்
  கோடின்னும் ஏன்தமிழா?

       உயிர்

மயிலுக்கு நிகர்வனப்பில்!
  மலருக்கு நிகர்குணத்தில்!
குயிலுக்கு நிகர்குரலில்!
  கொடிமுல்லை நிகர்சிரிப்பில்!
ஒயிலுக்கு நிகர்அவளை
  ஊழியினால் இழந்துவிட்டேன்!
உயிருக்கு விலையிருந்தால்
  உழல்வேனோ அவள்நினைவால்?

       துணி

துறைதோறும் நந்தமிழைத்
  துடைத்தொழிக்க நினைக்கும் மொழி
வெறியர்தம் சிறுசெயலை
  விரைந்துசென்று கண்டிக்க
நெறிகாட்டும்தலைவர்கட்கு
  நெஞ்சிலே துணிவிருந்தால்
குறிகெட்ட சிலர், தமிழைக்
  குறைத்தெண்ணும் நிலைவருமோ?

       அசை

கூடுகின்ற கார்முகிலில்
  கோதையவள் குழலசைவு
ஓடுகின்ற நதியினிலே
  ஒண்டொடியின் நடையசைவு
ஆடுகின்ற பூங்கொடியில்
  ஆயிழையின் இடையசைவு
வாடுகின்ற என்னெஞ்சில்
  மங்கையவள் எழிலசைவு!

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...