Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
கதம்பம் 1
கதம்பம் 2
கதம்பம் 3
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
       உண்டு

சித்திரையா தைமுதலா
  செந்தமிழர் புத்தாண்டு?
முத்தமிழ்ப்பற் றாளர்பலர்
  சித்திரையே என்கின்றார்!
வித்தகரோ தைமுதலே
  வேண்டுமென விரிக்கின்றார்!
இத்தரையில் என்தமிழர்க்கு
  இரண்டுண்டு புத்தாண்டு!

       நகை

நகைநட்டுக் கேட்டென்னை
  நச்சரிக்கும் என்னவளின்
வகைகெட்ட போக்கதனை
  வழிமாற்ற "அடீ!" உன் புன்
னகைக்(கு)இங்(கு) ஈடுண்டோ? பொன்
  நகைஏன்? என்பேன், அவளோ
"குகைகொள்ளா இருள்கண்டால்
  கூறிடுவீர்" என்றனளே!

       எது இல்லையோ அது...

எதுஇல் லையோ அதுவேண்டும்
  இன்று நமக்கு என்தோழா!
இதுநாள் வரைக்கும் நம்வாழ்வில்
  ஏனோ இன்னும் அதுஇல்லை!
அதுநம் வாழ்வில் ஓங்கிவிட்டால்
  ஆகா! இந்த வையகமே
ஒதுங்கி அஞ்சும் நம்மைக்கண்(டு)
  ஒற்றுமைதான் அதுதமிழா!

       ஏணி

நாவினிக்கும் நற்கனிகள்
  நல்கும் நெடுமரமுண்டு
பூவுலகம் என்னுமொரு
 பூஞ்சோலை தன்னிலே
யாவருக்கும் ஏணிகளுண்(டு)
  இங்கவற்றைப் பறித்துண்ண!
பாவம் தமிழனுக்கு ஏணிப்
  படியின்றி ஏங்குகின்றான்!

       இருந்தாலும்

வருங்காலச் சமுதாயம்
  வளமோடு வாழ்வதற்கு
உருவாகும் திட்டங்கள்தான்
  ஒன்றா இரண்டா அம்மா!
பொருள் இல்லான் வாழான் என்னும்
  பொன்மொழிக் குரிய வன்தான்
இருந்தாலும் இன்று தானே
  இவ்வுண்மை அறிந்து கொண்டான்!

       அஞ்சல்

கண்ணிரண்டும் காந்தமெனக்
  கவர்ந்திழுத்தான் நெஞ்சமதை!
வண்ணமுக நிலவழகன்!
  மறத்தமிழர் உருவழகன்!
எண்ணமதை அவனிடத்தில்
  எப்படித்தான் நானுரைப்பேன்?
பெண்ணியல்பு கெடுமென்றே
  பேதைமனம் அஞ்சுகின்றேன்!

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...