Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
யார் தமிழர்
தமிழ்த் தொண்டு
பூரிய தமிழர்
அடையாளம்
பீற்றுவது போதும்
தத்தளிக்கும் தமிழ்
கணினி
தமிழையன்றோ...
தமிழா விழித்தெழுக
தமிழ்ப் புத்தாண்டு
தமிழனுக்கு ஒரு...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நற்றமிழ்ச் சொல் லிருக்க நடைமுறை தமிழிருக்க
மற்றவர் சொல் லெதற்கு? மறைந்திடும் தமிழ் வழக்கு!
சொற்றமிழ் கூறும் இன்பச் சுவையறி யாத மூடர்
உற்றதோர் பெருமை என்ன? உயர்தனித் தன்மை என்ன?

வளர்ந்திடும் குழந்தை பேசும் மழலைஇன் தமிழைக் கேட்டுக்
கிளர்ந்தெழும் இன்பம் காணார் கேவலம் தமிழர் போல
உளர்எனும் தன்மை யன்றி உண்மையில் இல்லார் அன்றோ?
தளர்ந்திட வேண்டும் இந்தத் தமிழ்உணர் வற்ற தன்மை!

பிறமொழி கற்பதற்குப் பேதையர் எவர் தடுத்தார்?
அறமொழி தமிழும் கற்றல் அதுநம(து) உரிமை யன்றோ?
மறத்தமிழ் கற்றி ருந்தால் வரும்தலை முறைகள் நாளை
சிறந்ததோர் வாழ்வு பெற்றுச் செந்தமிழ் மானம் காக்கும்!

தமிழ்படிப் பதனால் வாழ்வில் தாழ்வுதான் மிஞ்சு மென்பார்!
உமிழ்ந்திட வேண்டும் அந்த ஊளையர் முகத்தில்! இந்த
இமிழ்க்கடல் சூழ்ந்த மண்ணில் இன்தமிழ் கற்ற பல்லோர்
அமிழ்தசெந் தமிழ்போல் வாழ்தல் அறிவிலார் அறியார் போலும்?

ஆங்கிலம் மலாயும் கற்க அதுதமிழ் பள்ளி தொட்டே
பாங்குடன் தொடங்க வேண்டும் பைந்தமிழ் மக்காள் கேளீர்! 
தூங்கிடும் தமிழ்உணர்வைத் தொட்(டு) எழுப்பாது போனால்
தாங்கிடும் தமிழன் என்னும் தடயமும் மறைந்து போகும்!

முத்தமிழ் கல்விக்(கு) இங்கு முதன்மைசெய் யாது போனால்
சொத்தென இருக்கும் இன்பச் சுடர்த்தமிழ்ப் பள்ளி எல்லாம்
தத்தெடுப் பார்கள் இன்றித் தடயம்இல் லாது போகும்!
மொத்தமும் போன பின்பு முகவரி தமிழர்க்(கு) ஏது?

"சுழியம்" என்(று) உரக்கச் சொல்லீர்! சுரணைகெட்(டு) இன்னும் வேற்று
மொழியினை இரந்து வாழும் முடமென இருக்க லாமோ?
விழிநிகர் மொழி யிருந்தும் விருப்பமோ பூஜ்ஜி யத்தில்?
வழிநமக்(கு) இருந்த போதும் மழுங்கையாய் வாழ லாமோ?

சேய்மொழி பள்ளி யெல்லாம் தென்னைபோல் உயர்ந்திருக்க
தாய்மொழி பள்ளி மட்டும் தாழ்ந்ததோர் நிலையில் அந்தோ!
தேய்மொழி ஆக லாமோ செந்தமிழ்? முன்னோர் தந்த
வாய்மொழி தமிழ் மறந்து வாழ்வது மடமை அன்றோ?

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...