Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
தமிழ்ப்பெயர்
தமிழ்நாட்டுத் தமிழன்
தமிழ்ச்செய்தி
இன்றைய தமிழ்ப்...
என்ன கொடுமை
பல்நோக்கு மண்டபம்
எங்கே மனிதநேயம்
ஊனமுற்ற தமிழ்
இன உறவும் மன...
சுதந்திரம்
ஏன் இந்த முடிவு
மனம் பதறுகிறோம்
நிழல் மரம்
இன்பம் பயக்குமா?
தமிழ் நாடகம்
சைபீர் முகமது
வேண்டாத சாதி
இன்றைய மாணவர்
புகைமூட்டம்
வாழ்த்துப் பரிமாரி...
தமிழ் நெடுங்கணக்கு
யாரிடம்போய்...
பிள்ளையையும்...
இந்நாட்டுத் தமிழன்...
செம்மொழி மாநாடு
பவன்- கறிஹவுஸ்
 
 
 
 
 
பட்ட பகற்பொழுதில்
வெட்ட வெளிச்சத்தில் - பிறர்
பாடுபட்டுச் சேர்த்துவைத்த
பொன்னையும் பொருளையும்
வீடு புகுந்து கொள்ளையிட்டுத்
தப்பிச் செல்லும்
சட்டத்தின் முகத்தில் கரியை
அப்பிச் செல்லும்
காவாலி களவாணிகட்கு,

எப்படி வந்தது
இப்படியொரு சுதந்திரம்?

ம்... சுதந்திர நாட்டில்
சட்டதிட்டம் மட்டும் நிரந்தரம்!

நகைநட்டுகள் அணிந்து - தனியே
செல்லும் பூவையரையும்
கைப்பையோடும் தோள்பையோடும் - தெருவில்
போவோரையும்
வழிமறித்துக் கொள்ளையிடும்
வழிபறி கொள்ளையர்கட்கு,

எப்படி வந்தது
இப்படியொரு சுதந்திரம்?

ம்... சுதந்திர நாட்டில்
சட்டதிட்டம் மட்டும் நிரந்தரம்!

உயர்வை நம்பி வியர்வை சிந்தி
உழைக்கும் பாட்டாளிகட்கு - கடல்கடந்து
பிழைக்கவந்த தொழிலாளிகட்கு
கூலி கொடுக்க மறுத்து - கேட்டால்
ஈவிரக்கமின்றி ஒறுத்துச்
சட்டத்தின் பிடியிலிருந்து நழுவும்
மற்றவர் உழைப்பில் வயிறு கழுவும்
ஈன கருங்காலிகட்கு,

எப்படி வந்தது
இப்படியொரு சுதந்திரம்?

ம்... சுதந்திர நாட்டில்
சட்டதிட்டம் மட்டும் நிரந்தரம்!

குலவும் பச்சைப் பிள்ளைகளை
இச்சைக்கு ஆளாக்கி - அவர்
வாழ்வையும் பாழாக்கி
உலவும் பருவப் பெண்களின்
உயிரினும் மேலான
கற்பையழித்து
கழிவிரக்கமின்றி
உயிரையும் பறித்து
உடலையும் எரித்து
நாட்டுக்குள் இன்னும் நடமாடும்
காட்டு விலங்கினும் கொடிய - சில
காமுக கொலையாளிகட்கு,

எப்படி வந்தது
இப்படியொரு சுதந்திரம்?

ம்... சுதந்திர நாட்டில்
சட்டதிட்டம் மட்டும் நிரந்தரம்!

காடுகளை அழித்து
மேடுகளைக் கரைத்து
வீடுகள் கட்டுவதாய் - பொய்த்
திட்டங்களைக் காட்டி
ஆசையினை மூட்டி - பொது
மக்களிடம் பணம் பறித்துத்
தொடர்பையும் முறித்துக்
கம்பியை நீட்டும்
சில வீடமைப்பாளர்களுக்கு,

எப்படி வந்தது
இப்படியொரு சுதந்திரம்?

ம்... சுதந்திர நாட்டில்
சட்டதிட்டம் மட்டும் நிரந்தரம்!

தோட்டங்கள் துண்டாடப்பட்டு
விற்கப்படும்போது
பாட்டாளி மக்களுக்கு
முன்னறிவிப்பு விடுக்காது
இழப்பீடு கொடுக்காது
நட்டாற்றில் விட்டோடும்
தோட்ட முதலாளிகட்கு
அல்ல! அல்ல! முதலைகட்கு,

எப்படி வந்தது
இப்படியொரு சுதந்திரம்?

ம்... சுதந்திர நாட்டில்
சட்டதிட்டம் மட்டும் நிரந்தரம்!

"இறை மீது நம்பிக்கை"
அதுவே,
இந்நாட்டின் கோட்பாடுகளில்
முதன்மையான கோட்பாடு - அது
மறையோதும் எம்மதத்தவர்க்கும்
பொதுவென்னும்
அரசாங்கத்தின் கொள்கை
எனினும்...
இங்கு,
இந்துகளின் கோயில்கள்
இடிக்கப்பட்டுத் தரைமட்டம்
ஆக்கப்படுகிறது!
அல்ல! அல்ல!
இந்துகளின் உணர்வும்
இறைநம்பிக்கையும்
அவமதிக்கப்படுகிறது!
இவையெல்லாம்...
நினைத்தபடி நிறைவேற்ற
நகராண்மைக் கழக அதிகாரிகட்கு,

எப்படி வந்தது
இப்படியொரு சுதந்திரம்?

ம்... சுதந்திர நாட்டில்
சட்டதிட்டம் மட்டும் நிரந்தரம்!

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...