Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
தமிழ்ப்பெயர்
தமிழ்நாட்டுத் தமிழன்
தமிழ்ச்செய்தி
இன்றைய தமிழ்ப்...
என்ன கொடுமை
பல்நோக்கு மண்டபம்
எங்கே மனிதநேயம்
ஊனமுற்ற தமிழ்
இன உறவும் மன...
சுதந்திரம்
ஏன் இந்த முடிவு
மனம் பதறுகிறோம்
நிழல் மரம்
இன்பம் பயக்குமா?
தமிழ் நாடகம்
சைபீர் முகமது
வேண்டாத சாதி
இன்றைய மாணவர்
புகைமூட்டம்
வாழ்த்துப் பரிமாரி...
தமிழ் நெடுங்கணக்கு
யாரிடம்போய்...
பிள்ளையையும்...
இந்நாட்டுத் தமிழன்...
செம்மொழி மாநாடு
பவன்- கறிஹவுஸ்
 
 
 
 
 
>
உடல் உறுப்புகளின்
உயிர்த்தன்மையை
வளர்ப்பது இதயம்!
அது நின்றால்
உயிரும் சிதையும்!

தமிழின் உயிர்த்தன்மை - அதனை
ஒலிக்கும் தன்மையில் இருக்கிறது! - சில
அறிவிப்பாளர் கூட்டம்
இது
அறியாமல் அறுக்கிறது! - குறையை
ஏற்கவும் மறுக்கிறது!
அடிப்படை ஒலிகளைப்
படித்திடச் சொன்னால்
நம்மை வெறுக்கிறது!

அந்தோ, தமிழே!
அறியாதவர் நாவில்,
அகப்பட்டு! அடிபட்டு!
இடிபட்டு! பொடிபட்டு!
அமிழ்தின் சுவைகெட்டு!
போகுதே பாழ்பட்டு!

உடல் உறுப்புகளில்
ஒன்று கெட்டாலும்
பழுதுபட்டாலும்
அது
ஊனமுற்ற உடம்பே!

அதுபோல,

தமிழ் இலக்கண
உறுப்புகளில் ஒன்றான,
உச்சரிக்கும் ஒலியின் தன்மை
கெட்டாலும் குறைபட்டாலும்
அது,
ஊனமுற்ற தமிழே!

உடற்குறையுற்றோரே! உடற்குறையுற்றோரே!
அடியேனை மன்னிக்க வேlண்டுகிறேன்!
ஊனம் என்னும் சொல்லை
உரிமையுடன் பயன்படுத்தியமைக்கு!
நுங்களைப் புண்படுத்தியமைக்கு!
தமிழுக்காகத் தயவின்றிச்
சற்றெல்லை தாண்டுகிறேன்!

(ழ)கரம், (ள)கரம், (ல)கரம்
இந்த மூவகை எழுத்துகளின்
வேறுபட்ட ஒலிகளை - சில
கூறுகெட்ட தமிழர்கள்
(ல)கர ஒலியிலேயே
உச்சரிக்கின்றார்கள்!
தவற்றை எடுத்துரைத்தால்,
"போதும் நக்கீரரே போதும்! - நும்
புலமையை வேறுபக்கம் ஓதும்!" என்று!
எச்சரிக்கின்றார்கள்!

(ன)கரம், (ண)கரம், (ந)கரம்
இவை மூன்றெழுத்துக்கும்
ஒலியில் வேறுபாடுகள்
உண்டென்று சொன்னால்
"வந்துவிட்டார் புலவர் அப்பா" என்று
வசைபாடுகின்றார்
என்றன் பின்னால்!

இடையின (ர)கரமும்;
வல்லின (ற)கரமும்
வேறுபட்ட ஒலியைக்
கொண்டவையாம் - அது தமிழர்
கண்டவையாம்!
என்றேன்,
"பண்டிதரே, போதும்!
நுமது செருக்கும் கருத்தும்!
கிண்டிக் கிளறிக்
கேலிசய்வதை நிறுத்தும்!"
என்கின்றார்!.

அறிவிப்பாளரே! அறிவிப்பாளரே!
வானொலி அறிவிப்பாளரே!

அறிவிப்பாளரே! அறிவிப்பாளரே!
தொலைகாட்சி அறிவிப்பாளரே!...

வாசிப்பாளரே! வாசிப்பாளரே!
தமிழ்ச்செய்தி வாசிப்பாளரே!

ஆசிரியரே! ஆசிரியரே!
தமிழ்ப்பள்ளி ஆசிரியரே!

பாடகரே! பாடகரே!
பைந்தமிழ்ப் பாடகரே!

நுங்களுக்கெல்லாம் ஒரு கவிதை!

இதோ!

"தமிழ்" என்பதைத்
"தமில்" என்று உச்சரித்துத்
தமிழின் தன்மையைப் பழிக்காதீர்!

"அழகு" என்பதை,
"அலகு" என்று உச்சரித்து
அழகுத் தமிழைக் குலைக்காதீர்!

"கண்கள்" என்பதை
"கன்கல்" என்று உச்சரித்துக்
கனிதமிழின் கண்ணைக் குத்தாதீர்!

"உள்ளம்" என்பதை
"உல்லம்" என்று உச்சரித்து
உயிர்த்தமிழின் உயிரை வாங்காதீர்!

"அளவு" என்பதை
"அலவு" என்று உச்சரித்து
அருமைத் தமிழைச் சிதைக்காதீர்!

தமிழமுதின் சுவையைப்
பருகவேண்டுமெனில் - மனம்
உருகவேண்டுமெனில்,

(ல), (ள), (ழ), (ன), (ண), (ந), (ர), (ற)
ஒலி வேற்றுமைகளை - தமிழ்
அறிந்தவரிடம் -நயம் - தெரிந்தவரிடம்
கற்றிடுவீர்! - பின்பு
இலக்கியம் பயின்று
தமிழமுதின் சுவை
பெற்றிடுவீர்!

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...